விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி,

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் பயணித்தது. இந்த விமானத்தில் ‘பிசினஸ்’ வகுப்பில் வயதான பெண் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த சங்கர் மிஸ்ரா (வயது 34) என்ற நபர் மதுபோதையில் அந்த பெண் மீது சிறுநீர் கழித்தார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அந்த விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்தபோதும் பணியில் இருந்த ஏர் இந்தியா பிரச்சினையை சரிசெய்வதிலேயே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் டெல்லிக்கு வந்த பின் ஆன்லைன் மூலம் தனது அதிருப்தி மற்றும் புகாரை ஏர் இந்தியா தலைமைக்கு அனுப்பியுள்ளார். ஆனாலும், சரிவர நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்த விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து பெண் பயணி புகார் அளித்தும் விமான ஊழியர்கள், விமான நிறுவனமும் சரிவர நடவடிக்கை எடுக்காதல்தால் ஏர் இந்தியா நிறுவனம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா 30 நாட்கள் தங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஒழுக்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சங்கர் மிஸ்ரா வேலை செய்துவந்த நிதி நிறுவனம் நேற்றுமுன் தினம் அவரை வேலையை விட்டு நீக்கியது. அதேவேளை பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா கடந்த 6 வாரங்களாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், 6 வாரங்களாக தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா நேற்று டெல்லி அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. சங்கரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென போலீசார் தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், போலீசாரின் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு சங்கரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.