ஜோஷிமத்: இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அங்கு 2 நாட்களுக்கு முன்பு ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதையடுத்து, பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை காலிசெய்துவிட்டு, இரவு முழுவதும் கடும் குளிரில் காலி இடங்களில் தங்கினர்.
ஜோஷிமத் நகரில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40 குடும்பங்கள் ஜோஷிமத் நகரை விட்டு இடம் பெயர்ந்து விட்டன. மேலும், 561 வர்த்தக நிறுவனங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜோஷிமத் நகரமே பூமியில் புதையும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக மறுவாழ்வு மற்றும் நீண்டகாலத் தீர்வுகளை அளிக்கக் கோரி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜோஷிமத் நிலவரம் தொடர்பாக, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்பகுதி மக்களுக்காக நிரந்தர, பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜோஷிமத் பகுதி மக்களுக்கான நிவாரண முகாம்களை, சமோலி மாவட்ட நிர்வாகம் அமைத்து வருகிறது. ஜோஷிமத் நகருக்கு தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு அபாயகரமானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப்படுத்த ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, ஜோஷிமத் நகருக்குச் சென்ற முதல்வர் புஷ்கர் சிங் தாமி, விரிசல் ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அபாயகரமானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அப்பறப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை அளிக்கிறோம். தற்காலிக முகாம்களுக்கு வந்தவர்களுக்கு நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4,000 அளிக்கப்படும். 100 குடும்பங்கள் அபாயப் பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டன. இவ்வாறு முதல்வர் கூறினார்.
காரணம் என்ன?: பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப் பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன. இது நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலையின் டெக்னானிக்ஸ் நிபுணரும், பெங்களூருவில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மலைப் பகுதிகளில் 825 கி.மீ. தொலைவுக்கு `சார் தாம்’ நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக, சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஏற்கெனவே பலமுறை கவலை தெரிவித்திருந்தனர். ஆனால், தேசியப் பாதுகாப்பை காரணம் கூறி, உச்ச நீதிமன்றம் 2021-ல் எதிர்ப்புகளை நிராகரித்துவிட்டது.
இங்கு ஹெலாங் என்ற இடத்தில் இருந்து, மார்வாரி என்ற பகுதி வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதுவும் நிலப் பகுதியில் ஏற்படும் விரிசல்களுக்குக் காணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.