சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பதுக்கல் வழக்கு தொடர்பாக, சசிகலா உறவினரான தொழிலதிபர் பாஸ்கரை மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு போலீஸார் சென்னையில் நேற்று கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற `கட்டை’ பாஸ்கர். இவர், சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் – இளவரசியின் மகன் விவேக்கின் மாமனார். தொழிலதிபரான இவர் சென்னையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
அந்தக் கடையில் விலை உயர்ந்த மரங்களைக் கொண்டு பர்னிச்சர் தயாரித்து, விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்கு ஆந்திராவில் இருந்து கடத்திக்கொண்டு வரப்படும் செம்மரக் கட்டைகளைப் பயன்படுத்தி பர்னிச்சர் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாஸ்கர் மீது ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 2021-ல் ஆந்திர மாநில போலீஸார், செம்மரக் கட்டை கடத்தல் வழக்கு தொடர்பாக பாஸ்கரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தொடர்ந்து அவரிடம் ஆந்திர மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், பாஸ்கரிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள பாஸ்கரின் வீடு மற்றும் பர்னிச்சர் கடையில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கடையில் ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பாஸ்கர் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்தியதாக பாஸ்கர் மீது மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ரூ.48 கோடி செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சென்னை அண்ணா நகரில் உள்ள பாஸ்கரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும், தியாகராய நகரில் அவருக்குச் சொந்தமான இடத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் பாஸ்கரை நேற்று கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கர், சிறையில் அடைக்கப் பட்டார்.
2021-ம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் உள்ள பாஸ்கரின் வீடு, பர்னிச்சர் கடையில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.