2022இன் முதலரைப்பகுதியில் கணிசமானளவு உயர்வாகவிருந்த உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மைப் பற்றாக்குறையானது 2022இன் பிற்பகுதியில் வீழ்ச்சியடைந்தது.
எனினும், பணச் சந்தை திரவத்தன்மை நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பகுதியளவில் உள்நாட்டு பணச் சந்தைகளின் செயற்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாக காணப்பட்டது. அதேவேளை, பல்வேறு உரிமம்பெற்ற வங்கிகள் அவற்றின் கட்டமைப்புசார் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சந்தை அடிப்படையிலான நிதியிடல் தெரிவுகளைக் கருத்திற்கொள்ளாது மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஓரிரவு துணைநில் வசதிகள் மீது தொடர்ந்தும் மிதமிஞ்சியளவு தங்கியிருக்கின்றன என்று அவதானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து நிதியிடல் தெரிவுகளைப் பயன்படுத்திய பின்னர் மீளப் பெறும் தெரிவுகளாகப் பயன்படுத்துவதற்கு கிடைக்கக்கூடியதாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது மிகையாக சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு சமிஞ்சைகளை அத்தகைய உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் எடுத்துக்காட்டவில்லை.
இவை பணச் சந்தைகளை, முதன்மையாக வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை மற்றும் மீள்கொள்வனவு சந்தையை மீண்டும் செயற்படுத்துவதற்கான மத்திய வங்கியின் முயற்சிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அத்தகைய நடத்தை பாதிக்கின்ற அதேவேளை, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை தடைப்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டுடன் பொருளாதாரத்தில் நிதியிடலை சீராக வழிப்படுத்துவதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதற்கமைய, நாணய மற்றும் நிதியியல் துறையின் உறுதிப்பாட்டை பாதுகாத்து மேற்குறிப்பிட்ட இடர்நேர்வுகளைத் தீர்ப்பது உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பேரண்டப்பொருளாதார சமநிலையை மீளக்கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு, 2022 ஏப்பிறலிலிருந்து எடுக்கப்படுகின்ற முன்னெப்பொழுதுமில்லாத கொள்கை வழிமுறைகளின் பாகமொன்றாக, இலங்கை மத்திய வங்கியானது திறந்த பணச்சந்தை தொழிற்பாடுகளின் கீழ் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான துணைநில் வசதிகளின் கிடைக்கும்தன்மை மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
எனவே, 2023 சனவரி 16 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், அதிகப்படியான திரவத்தன்மையை வைப்பிலிட்டு வட்டியைப் ஈட்டுவதற்கு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை இயலச்செய்கின்ற ஓரிரவு வைப்பு வசதியானது கலண்டர் மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் ஐந்து (05) தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்படும். அதேசமயத்தில், நாளின் இறுதியில் மத்திய வங்கியிடமிருந்தான திரவத்தன்மைத் தேவைப்பாடுகளின் ஏதேனும் மேலதிகப் பற்றாக்குறையைப் பூர்த்திசெய்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்காக வழங்கப்படும் பிணையஉறுதியாக்கப்பட்ட வசதியான துணைநில் கடன்வழங்கல் வசதியானது ஏதேனும் கொடுக்கப்படும் நாளில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியின் நியதி ஒதுக்கு தேவைப்பாட்டின் 90 சதவீதத்திற்கும் மட்டுப்படுத்தப்படும்.
உள்நாட்டு பணச் சந்தையில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளை அதேபோன்று துணைநில் வசதிகளின் பயன்பாட்டிற்கமைவாக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நடத்தையையும் கவனமாகக் கருத்திற்கொண்டு இத்தகைய வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. துணைநில் வசதிகளின் மீதான வரையறைகளின் நடைமுறைப்படுத்தல், மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீதான உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மிகையான தங்கியிருத்தலைக் குறைத்து கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட செயலற்ற நிலையிலிருந்த உள்நாட்டு பணச் சந்தையை மீண்டும் செயற்படுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றுக்கிடையில் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்;குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய வழிமுறைகள் நிதியியல் நிறுவனங்களுக்கிடையிலான வைப்புக்களுக்கான ஆரோக்கியமற்ற போட்டியையும் நீக்கி, சந்தை திரவத்தன்மை நிலைமைகளை முன்னேற்றுவதோடு, எதிர்வரும் காலத்தில் சந்தை வட்டி வீதக் கட்டமைப்பில் (வைப்பு மற்றும் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் ஆகிய இரண்டிலும்) மிதமடைதலொன்றை தூண்டுவதுக்கு ஏதுவாக அமையக்கூடும். இது, இலங்கை பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை மீளக்கட்டியெழுப்பும் அதேவேளை நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பாதுகாப்பதற்கும் துணையளிக்கும்.
Published Date:
Saturday, January 7, 2023