கமுதி: கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு மிளகாய் பழம் பறிக்கும் பணியை துவக்கினர். கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கோரைப்பள்ளம், கீழராமநதி, தலைவநாயக்கன்பட்டி, புளிச்சிகுளம், பேரையூர், கீழவலசை, சேர்ந்தகோட்டை உட்பட ஏராளமான கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இதில் பெரும்பாலும் மானாவாரி நிலப்பகுதியில் முண்டு மிளகாயும், பாசன வசதியுடைய பகுதியில் சம்பா மிளகாயும் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் சம்பா மிளகாய்க்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. தற்போது மிளகாய் பழம், நல்ல சிவப்பு நிறத்தில் வரத் துவங்கியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களாக இதனை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில், இயற்கை விவசாயி ராமர் தனது 10 ஏக்கர் நிலத்தில் சம்பா மிளகாய் விவசாயம் செய்துள்ளார். இதில் முன்னதாக பயிர் செய்யப்பட்ட தோட்டத்தில், மிளகாய்பழம் பறிக்கும் பணியை நேற்று பெண்கள் துவக்கினர். பொங்கல் வைத்து வழிபட்டு, குலவை சத்தமிட்டு இப்பணியை துவக்கினர். இயற்கை விவசாயி ராமர் கூறும்போது, தனது 10 ஏக்கருக்கு மேல் உள்ள தோட்டத்தில் சம்பா மிளகாய் பயிரிடப்பட்டதாகவும், தற்போது மிளகாய் பழம் பறிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட செடிகளில், மிளகாய் பழம் பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு இன்னும் 5 மாதங்கள் வரை இந்த பணிகள் நீடிக்கும் என்று கூறினார்.
இந்த வருடம் சம்பா மிளகாய் நன்றாக விளைந்துள்ளதாகவும், இது ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 குவிண்டால் வரை மிளகாய்பழம் கிடைக்கும். மேலும் ரசாயன உரமின்றி, நாட்டு மாடுகள் மற்றும் ஆட்டுச் சாணங்களை உரமாக இட்டு, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டி பொறிகளை வைத்தும், சொட்டு நீர்பாசனம் மூலம் இந்த விவசாயம் நடைபெற்றது. முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டதால், இதில் கிடைக்கும் மிளகாய்க்கு நல்ல மவுசு இருக்கிறது. இதற்கு தற்போது நல்ல விலை கிடைக்கிறது. இந்த மிளகாயை வாங்குவதற்கு பலர் போட்டி,போட்டு வருவதாகவும், இந்த மிளகாய் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறினார். விவசாயி ராமர், இயற்கை விவசாயம் சிறப்பான முறையில் செய்து வருவதற்கு கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழும், விருதுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.