நீண்ட காலமாகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவந்தன. இந்த நிலையில், உக்ரைன் உளவுத்துறை அதிகாரி கைரிலோ புடானோவ் (Kyrylo Budanov) ஏபிசி என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதின் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்குப் புற்றுநோய் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். அவர் கூடிய விரைவில் இறந்துவிடுவார். புதினுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து எங்களுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. புதினின் மறைவுக்குப் பிறகு மற்றொரு ரஷ்யத் தலைவருக்கு அதிகாரம் மாற்றப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
இதற்கு முன்பாக புதினின் உடல்நலக் கோளாறுகள் குறித்து பல்வேறு செய்திகளைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தில், உலகப் புகழ்பெற்ற `தி இன்டிபெண்டன்ட்’ ஊடகம், “புதினுக்குப் புற்றுநோய் இருக்கிறது. மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார்” என்று செய்தி வெளியிட்டது. அந்தச் சமயத்தில் வேறு சில சர்வதேச ஊடகங்கள், “புதின் டி.வி-யில் தோன்றிப் பேசும்போது, அவர் என்ன பேச வேண்டுமென்பதைக் காகிதங்களில் பெரிய எழுத்துகளில் அச்சடித்துக் கொடுக்கிறார்கள். ஒரு காகிதத்தில் இரண்டு வரிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்கு புதினின் பார்வை மங்கிக் கொண்டே வருகிறது. அடிக்கடி புதினுக்கு கடும் தலைவலியும் ஏற்படுகிறதாம். அவருக்கு பார்கின்சன்ஸ் (மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு) நோயும் இருக்கிறது” என்று செய்தி வெளியிட்டிருந்தன.
இதுபோக, `வயதைக் குறைத்துக் காட்ட புதின் காஸ்மட்டிக் சர்ஜரி மேற்கொண்டிருக்கிறார்’, `நாம் பொதுவெளிகளில் காண்பது நிஜப் புதினே இல்லை. அவரைப் போலவே இருக்கும் வேறொருவர்’ என்பது போன்ற ஏராளமான செய்திகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
இது போன்ற செய்திகள் குறித்து ஒரு முறை பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “70 வயதை நெருக்கிக் கொண்டிருக்கும் புதின், தினசரி பொதுவெளியில் தோன்றுகிறார். இவ்வளவு சுறுசுறுப்பான தலைவருக்கு நோய் இருக்கிறது என்று எப்படித்தான் சொல்கிறார்களோ” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
உக்ரைன் உளவுத்துறையின் இந்தக் கருத்து குறித்து சர்வதேச அரசியலை உற்றுநோக்கும் சிலர், “தற்போது புதினின் உடல்நிலை குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளை அமெரிக்காதான் திட்டமிட்டுப் பரப்புவதாகச் சிலர் சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள். உலக அரங்கில் ரஷ்யாவையும், அதன் அதிபர் புதினின் செல்வாக்கையும் குறைக்கவே அமெரிக்கா இது போன்ற வதந்திகளைப் பரப்புவதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம், உக்ரைன் உளவுத்துறை அதிகாரி கைரிலோ, `புதின் விரைவில் இறந்துவிடுவார்’ எனச் சொல்லியிருக்கும் தகவலுக்கு ரஷ்யா தரப்பு இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை. புதினுக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சொல்லும் உக்ரைன் உளவுத்துறை அதற்கான ஆதாரங்கள் வெளியிட்டால் மட்டுமே இந்தத் தகவலை உறுதியாய் நம்ப முடியும்” என்கிறார்கள்.