”வெளிய தலைகாட்ட முடில.. எங்களுக்கும் குடுங்க” – தெலங்கானா வழுக்கை தலை சங்கத்தினர் கோரிக்கை

முடி உதிர்தல், இள வயதில் நரை முடி வருவது எப்படி பலருக்கும் கடுப்பாக இருக்கிறதோ அதே போல வழுக்கை தலையாக இருப்பவர்கள் சமூகத்தில் அனுபவிக்கும் பல இன்னல்களும் வெறும் வாய் வார்த்தையாக சொல்வது எளிதாக இருக்காது.
இப்படி இருக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது போன்று வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் வழுக்கை தலை உள்ளவர்களுக்கென தெலங்கானாவில் சங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தலைவர் தேர்தலும் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி பாலையா என்பவர் அந்த சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து முக்கியமான கோரிக்கையை முன்வைத்து தெலங்கானா முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் பாலையா. அதில், “வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் இந்த சமூகத்தில் பல பிரச்னைகளையும், அவமானங்களையும் நித்தமும் அனுபவிக்கிறார்கள்.
இதனால் பொதுவெளியில் செல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. இதுபோக வழுக்கையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. மேலும் தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து பெரும் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.
தீராத நோய் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எப்படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறதோ அதேபோல வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் மாதாமாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை பொங்கல் பண்டிகைக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பெரியளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.