புதுடெல்லி: விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பி.டெக் மாணவிக்கு தங்கள் ஒரு நாள் சம்பளத்தை சேகரித்து ரூ.10 லட்சம் உதவி வழங்க நொய்டா போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந் தவர் ஸ்வீட்டி குமாரி. இவர் தனது தோழிகள் கர்சோனி தாங் (அருணாச்சல் பிரதேசம்), அங்கன்பா (மணிப்பூர்) ஆகியோ ருடன் கடந்த டிசம்பர் 31-ம் தேதிபுத்தாண்டை கொண்டாட கிரேட்டர் நொய்டா பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். ஆனால், கார்நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் ஸ்வீட்டி குமாரி படுகாயம் அடைந்து நினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 2 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஆனால் ஆபத்தான நிலையில் ஸ்வீட்டி குமாரி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஸ்வீட்டி குமாரியின் மருத்துவச் செலவுகளுக்கு, தங்கள் ஒரு நாள் சம்பளத்தின் மூலம் ரூ.10 லட்சத்தை வழங்கப் போவதாக கிரேட்டர் நொய்டா போலீஸார் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத் தில் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை கிரேட்டர் நொய்டா போலீஸ் டிஜிபி அறிவித்துள்ளார்.
பி.டெக். படிக்கும் மாணவி ஸ்வீட்டி குமாரிக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலில் மட்டும் 5 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு மற்றொருஅறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் உதவியை அளிக்கும் கிரேட்டர் நொய்டா போலீஸாருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித் துள்ளனர்.