மும்பை, சென்னை மற்றும் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் நைஜீரியா உட்பட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர். அவர்களைக் கண்டுபிடித்து நாடு கடத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆப்பிரிக்க பிரஜைகள் போதைப்பொருள் விற்பனை செய்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு டெல்லியிலுள்ள நப்சாராய் என்ற இடத்திலுள்ள ராஜு பார்க் என்ற கட்டடத்தில் அதிக அளவில் ஆப்பிரிக்க பிரஜைகள் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், டெல்லி போலீஸின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அந்தக் கட்டடத்துக்கு ரெய்டு நடத்த சென்றனர். அங்கு விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர். உடனே அந்தப் பகுதியில் தங்கியிருந்த ஆப்பிரிக்க பிரஜைகள் 100-க்கும் அதிகமானோர் ஒன்று சேர்ந்து 3 பேரையும் அழைத்துச் செல்லவிடாமல் வாக்குவாதம் செய்தனர். அதோடு போலீஸாரை தாக்க ஆரம்பித்தனர்.
கைதுசெய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்கவேண்டும் என்று கோரி வாக்குவாதம் செய்தனர். இதில் பிடிபட்ட 3 பேரும் தப்பிச்சென்றுவிட்டனர். ஆனால் போலீஸார் 22 வயது பிலிப் என்பவனை மட்டும் மீண்டும் கைதுசெய்தனர்.
அடுத்த சில மணி நேரத்தில் டெல்லி போலீஸாரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து மீண்டும் அதே இடத்துக்கு வந்து ரெய்டு நடத்தினர். அவர்கள் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருந்த பெண் உட்பட 4 ஆப்பிரிக்க பிரஜைகளை கைதுசெய்தனர். இதனால் மீண்டும் ஆப்பிரிக்க பிரஜைகள் 200-க்கும் அதிகமானோர் ஒன்று சேர்ந்து கைதுசெய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்லவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தனர். சிலர் போலீஸாரை தாக்கவும் ஆரம்பித்தனர்.
கைதானவர்கள் தப்பிச்செல்ல உதவ அவர்கள் முயன்றனர். ஆனால் போலீஸார் இந்த முறை முன்னெச்சரிக்கையுடன் சென்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்தி கைதுசெய்த நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர்களை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.