ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி கீழூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சாலையோர தடுப்புக் கம்பிகளை தாண்டி சுமார் 20 அடி பள்ளத்தில் ஆபத்தான நிலையில் இறந்தவர்களை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது. தடுப்புக் கம்பிகளை அகற்றி படிகள் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில் புதுக்குடி கீழூரில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு என தனியாக சுடுகாடு இல்லாத நிலையில் காலம் காலமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இறந்தவர்களை புதைத்து வருகின்றனர். நெல்லை- திருச்செந்தூர் பிரதான சாலை ஓரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் இறந்தவர்களை சுமந்து சென்று அடக்கம் செய்து வந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.
மேலும் சாலையின் மறுபுறம் இறந்தவர்களை அடக்கம் செய்ய வனத்துறையினர் தடைவிதித்து அபராதம் விதித்து வருகின்றனர்.இதனால், புதுக்குடி கீழூர் மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அடக்கம் செய்ய இறந்தவர்களை சுமந்து செல்பவர்களும் துக்க நிகழ்வில் பங்கேற்பவர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் தடுப்புக் கம்பியை தாண்டி சுமார் 20 அடி உயர பள்ளத்தில் இறங்கி ஏறுகின்றனர். இந்நிலையில், இறந்தவர்களை சுமந்து செல்ல ஏதுவாக குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் தடுப்புக்கம்பிகள் அகற்றி பள்ளத்தில் இறங்குவதற்கு வசதியாக படிகள் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருமலைக்குமார் கடந்த 6மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவிற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழுரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வியாபாரி உடல் நலமின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் அடக்கம் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் கொண்டு சென்று கடும் சிரமங்களுக்கிடையே தடுப்புக் கம்பிகளை தாண்டி 20 அடி பள்ளத்தில் அடக்கம் செய்தனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கிட உடனடியாக தடுப்பு கம்பிகளை அகற்றி அப்பகுதியில் படிகள் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.