பொங்கல் திருநாளாம் ஜனவரி 15 ஆம் தேதி நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை, வேறு தேதியில் நடத்த வலியுறுத்தி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோவை தலைமை தபால் தந்தி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘மத்திய அரசே, தமிழர்களின் வேலை வாய்ப்பினை பறிக்காதே’, ‘பொங்கலன்று நடக்கும் தேர்வு தேதியை மாற்றி வை’ எனக் கோரி, மோடி அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழு்ப்பப்பட்டன.
தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய 3 தேதிகளிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில், தமிழகத்தில் காலியாக உள்ள 350 க்கும் மேற்பட்ட கிளார்க் பணி இடத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வில் தமிழர்கள் அதிக அளவு கலந்துகொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பொங்கல் பண்டிகை தினத்தன்று தேர்வு நடத்தப்படுவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே தமிழர்களின் திருவிழா நாட்களில் எஸ்.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தமிழர்களை அரசுப் பணியில் புறக்கணிக்கும் வேலையை விடுத்து, பண்டிகை இல்லாத காலங்களில் தேர்வு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிப சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில அரசுப் பள்ளிகளில் மாட்டுப் பொங்கலன்று விடுமுறை அளிக்காமல் இருப்பதற்கும் ஆர்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வங்கி தேர்வுகள் போன்ற வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் நடத்தப்படுவதுதான் வழக்கம். இந்த வழக்கத்தின்படியே எஸ்பிஐ கிளார்க் பணியிடத்துக்கான தேர்வும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) நடத்தப்பட உள்ளது.
அந்த நாளில் பொங்கல் பண்டிகை வருகிறது என்பதால் அகில இந்திய அளவிலோ, ஒன்றும் மேற்பட்ட மாநிலங்களிலோ நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் ஒத்திவைப்பது இயலாத விஷயம் என்ற கருத்தும், இதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருப்பதாகவும், இவற்றை போட்டியாளர்களும், போராட்டகாரர்களும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.