திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் அனுஸ்ரீ பார்வதி (19). இவர்காசர்கோடு மாவட்டம் மஞ்சீஸ்வரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி அவரது குடும்பத்தினர் ஆன்லைன் வாயிலாக பிரியாணி வாங்கினர்.
இந்த பிரியாணியை அனுஸ்ரீ, அவரது தாய் அம்பிகா, தம்பி ஸ்ரீகுமார் மற்றும் 2 உறவினர்கள் சாப்பிட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றனர். மற்றவர்கள் குணமடைந்த நிலையில் அனு ஸ்ரீ பார்வதியின் உடல் நிலை மட்டும் மோசமானது.
இதைத்தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை அனுஸ்ரீ உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: காசர்கோட்டில் செயல்படும் அல் ரோமான்சியா ஓட்டலில் இருந்து அனுஸ்ரீ குடும்பத்தினர் ஆன்லைன் வாயிலாக பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். கெட்டுப் போன உணவு என்பதால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட அனுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதே ஓட்டலில் அன்றைய தினம் பிரியாணி சாப்பிட்டவர்களில் 20 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரியாணி சமைக்க கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தியிருப்பதாகக் தெரிகிறது. காசர்கோடு ஓட்டல்கள் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கெட்டுப்போன உணவு வகைகளை விநியோகிக்கும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.
அப்போதுதான் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த செவிலியர் ரேஷ்மி (33), ஓட்டலில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டலில் விற்கப்பட்ட கெட்டுப் போன உணவு வகைகளை சாப்பிட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, “மாணவி அனுஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஓட்டல்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.