உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் வசிப்பவர்கள், வயதான பெண்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தும் கொலைகாரன் அலைந்து திரிவதால் பீதியிலும் அச்சத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வயதான பெண்களைக் குறிவைத்து அவர்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கொலையாளியைத் தேட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று பாராபங்கி காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர், மேலும் தொடர்ந்து கொலைகளை செய்பவர் என கூறப்படும் நபர் இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவுமாறு மக்களையும் கேட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்த கொலைக்காரன் மூன்று கொலைகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சம்பவம் அயோத்தி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அன்று நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மாவாய் பகுதியின் குஷெட்டி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான பெண், வேலைக்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளார். மாலை வரை அவர் திரும்பி வராததால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
பின்னர் டிசம்பர் 6 ஆம் தேதி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் உடல் துணியின்றி காணப்பட்டதுடன், முகம் மற்றும் தலையில் காயங்களும் காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவத்தில், 62 வயதான பெண் ஒருவர் அதே வழியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாரபங்கி மாவட்டத்தில் வயலில் இருந்து மீட்கப்பட்டது. இதேபோல், டிசம்பர் 30 ஆம் தேதி, ராம்ஸ்நேஹிகாட் கோட்வாலியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ததர்ஹா கிராமத்தில் 55 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலையின் முறையும் இதேபோன்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.