கோவில்பட்டி: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் கோவில்பட்டி பகுதிக்கு பனங்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது. 25 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு தங்களது இல்லங்களில் உள்ள தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, இல்ல சுவர்களில் வெள்ளை மற்றும் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொங்கலுக்கு தேவையான கரும்புகளும் மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரத்துவங்கியுள்ளன.
பொங்கலுக்கான மண் பானைகள், அடுப்புகளும் மானாமதுரை, சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். பொங்கல் என்றாலே அறுசுவை உணவுடன் கூடிய உணவு பதார்த்தங்களை தமிழக மக்கள் சமைத்து உண்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இதற்கான கேரட், கத்தரிக்காய், முட்டைகோஸ், பல்லாரி, முருங்கை, மாங்காய் உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகளும் மார்க்கெட்டிற்கு வரத்துவங்கி விட்டன.மேலும் பொங்கல் பொருட்களில் முக்கியமான பனங்கிழங்குகளின் விளைச்சலும் இந்தாண்டு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சங்கரன்கோவில், ராமநாதபுரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பனங்கிழங்கு வருகிறது.
இப்பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பனங்கிழங்குகளை மொத்தமாக வாங்கி லாரி, வேன்களில் கோவில்பட்டிக்கு கொண்டு வருகின்றனர். கோவில்பட்டி மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு, புதுரோடு, எட்டயபுரம் ரோடு, இளையரசனேந்தல் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடை விரித்து பனங்கிழங்குகளை வியாபாரிகள் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். 25 எண்ணம் கொண்ட ஒருகட்டு பனங்கிழங்கு ₹100 வரையிலும் விற்கின்றனர். சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக உள்ளதால், வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் பனங்கிழங்கு விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பனங்கிழங்குகளை மக்கள் கட்டுகட்டாக வாங்கி செல்கின்றனர்.