லக்னோ: கும்பமேளா திருவிழா இந்துக்களால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஆற்றுப்படுகையில் கும்பமேளா நடைபெறும்.
இதில் உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறும் கூடும் இடமாகும். இந்த நிகழ்ச்சி தொடர்பாக உ.பி. மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக 2025-ம் ஆண்டில் ரூ.6,800 கோடியை உ.பி. அரசு செலவிடும். 2019 மகா கும்பமேளாவுக்கு 24 கோடி பக்தர்கள் வந்திருந்தனர். 2025-ம் ஆண்டு மகா கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி 3,700 ஹெக்டேர் பரப்பளவில் கண்காட்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்காக புதிதாக 1,575 பேருந்துகள் வாங்கப்படும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.