தருவைகுளம் ஏலக்கூடத்துக்கு மீன்கள் கொண்டு வருவதில் சிக்கல்: மீன்வளத்துறை தூர்வார நடவடிக்கை எடுக்குமா?

குளத்தூர்: மீன்பிடி இறங்குதளத்தின் கரையோரத்தில் 30 மீட்டரில் உருவான மணல் திட்டுக்களால் தருவைகுளம் ஏலக்கூடத்திற்கு மீன்களை விற்பனை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விசைப்படகுகளை 100 மீட்டர் தொலைவில் கடல் பகுதியிலேயே நிறுத்தும் அவலநிலை உள்ளதால் மீன்வளத்துறை மணல் திட்டுக்களை தூர்வார நடவடிக்கை எடுக்குமா என்று மீனவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். குளத்தூர் அருகே தருவைகுளத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் என 500க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தங்கு கடலுக்கு சென்றுவிட்டு திரும்பும் மீனவர்கள் விசைப்படகுகளை ஏலக்கூடம் அருகே நிறுத்த வசதியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மீன்இறங்குதளம் அமைக்கப்பட்டது.  

இதனால் இறங்குதளத்தின் கரையோரத்தில் படகை நிறுத்தி, மீன்களை ஏலக்கூடத்தில் விற்பனைக்காக மீனவர்கள் இறக்கி வைத்தனர். தற்போது, இப்பாலத்தின் கரையோர பகுதி படகுகளை நிறுத்த வசதியின்றி மணல் திட்டுகளாக உள்ளது. கரையிலிருந்து சுமார் 30 மீட்டருக்கு திட்டுகளாக உள்ளதால் விசைப்படகுகளை கரையோரம் கொண்டு வர மீனவர்களுக்கு சிரமமாக உள்ளது. நாளுக்கு நாள் மணல் திட்டு அதிகரித்த வண்ணம் உள்ளதால் மீன் இறங்குதளத்தின் ஓரம் படகுகளை நிறுத்த முடியாமல் கரையிலிருந்து 100 மீட்டர் கடல் பகுதியிலேயே படகுகளை நிறுத்தி அங்கிருந்து நாட்டுப்படகுகள் மூலம் மீன்களை ஏலக்கூடத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, மணல் திட்டை அகற்ற மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்  தெரிவித்தனார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்  மீனவர்களுக்கு பணவிரயம் ஏற்படுவது மட்டுமின்றி வேலை அதிகமாகவும், அலைச்சலாக இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து மீன்கள் மொத்த வியாபாரி மனோகரன் கூறுகையில், ‘தூத்துக்குடி மீன் ஏலக்கூடத்திற்கு இணையாக தருவைகுளம் மீன் ஏலக்கூடம் உள்ளது. நாகை, கன்னியாகுமரி, மதுரை, சென்னை, கேரளா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு மீன்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் தினசரி கடல், தங்கு கடல் என எப்போதும் மீன்கள் வியாபாரத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. விசைப்படகுகள் ஏலக்கூடத்திற்கு அருகில் வரமுடியாமல் இருந்த நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏலக்கூடத்தின் அருகிலேயே விசைப்படகுகளை நிறுத்த வசதியாக பாலம் அமைக்கப்பட்டது. இதனால், மீனவர்கள் எளிதாக மீன்களை இறக்கி வந்தனர். இப்பாலத்தின் கரையோரம் சேரும் மணல் திட்டுகளை தூர்வாரவோ, சீரமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. மணல் திட்டுகளினால் கரையோரம் படகுகளை நிறுத்த முடியாமல் கடல் பகுதியிலேயே நிறுத்தி மீன்களை இறக்குவது சிரமமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம்  தெரிவித்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இப்பகுதியில் நாளுக்கு நாள் மணல் திட்டுகள் அதிகரிப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு கரையோர பகுதியில் தூர்வாரி மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.