சென்னை: அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் குடும்பத்தோடு கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எம்ஆர்பி செவிலியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
எம்ஆர்பி செவிலியர்கள் சங்க கூட்டமைப்பினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,” நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தை முறையாக இல்லை. காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறிய நிலையில் மாலை நான்கு மணிக்கு தான் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் எங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூற இடையூறு செய்தனர்.
நாங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் பணியமர்த்தப்பட்டோம் என்று ஏற்கெனவே அமைக்கப்பட்ட கமிட்டியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் தான் அந்த கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த கமிட்டி கூறியதை ஏற்க மறுக்கிறார்கள். அந்த கமிட்டி பொய் என்றால், அதன் மீது விசாரணை கமிஷன் அமைக்க அரசு தயாராக உள்ளதா?
நாங்கள் பணியமர்த்தப்பட்ட போது, அரசு தரப்பில் எங்களுக்கு அனுப்பிய ஆணையில், இந்த பணியை 3 நாட்களுக்குள் ஏற்கவில்லை என்றால் வரும் காலங்களில் அரசு செவிலியர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் 50,000 ஊதியத்தில் இருந்தவர்கள் உட்பட பலர் அதை விட்டு விட்டு அரசு பணியை ஏற்றனர்.
ஆனால் தற்பொழுது எங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியமர்த்தவில்லை என்று தெரிவிக்கிறார்கள். எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க மறுத்தால் குடும்பத்தோடு கோட்டையை முற்றுகையிடுவோம்.” இவ்வாறு அவர்கள் கூறினார்.