மதுரை: சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு நிறுத்திய நிதியை மீண்டும் வழங்கக்கோரி, கல்லூரிகள் கடிதம் எழுத வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூட்டாவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, 25வது மாநாடு கடந்த 2 நாட்களாக மதுரையில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘‘சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியது. இதுதான் மாற்றமா? வெறுப்புப்பேச்சுக்கள் மாணவர்களிடையே கல்லூரிகளில் திணிக்கப்படுகிறது.
தவறான தகவல்கள், தவறான சரித்திரங்களை கூறுவது, தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறை, விஞ்ஞானப்பூர்வ பார்வை சிதைக்கப்படுகிறது. இதிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நிறுத்தியது குறித்து சிறுபான்மை நலக்குழு தலைவர் என்ற அடிப்படையில் உதவித்தொகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்கிடுங்கள் என்று கடிதம் அனுப்பும்படி அறிவுறுத்தினேன். ஆனால் இதுவரை எந்த சிறுபான்மை கல்லூரியும் அதை செய்யவில்லை. சிறுபான்மை மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகள் கிடைப்பதன் மூலம் அவர்கள் மிகப்பெரும் பயனடைவார்கள்’’ என்றார்.