புதுக்கோட்டை: தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தான் ஆண்டின் முதல் ஜல்லிக் கட்டு நடைபெறும். இதன்படி ஜனவரி மாதம் 2-ம் தேதி எப்போதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன் பின்பு தமிழகத்தின் மற்ற ஊர்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜன.8) தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என வித விதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.