திருமலை: தெலங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை சங்கத்தின் தலைவராக உள்ளவர் பாலய்யா. இந்த சங்கத்திற்கு துணை தலைவர், பொருளாளர் என நிர்வாகிகளும், ஏராளமான உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், வழுக்கை தலை சங்கத்தின் தலைவர் பாலய்யா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘மனிதர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் தான் கேலி கிண்டல்களுக்கு உள்ளாவார்கள். ஆனால், நாங்களோ பல வருடங்களாக தினமும் அடுத்தவர்களின் கேலிப்பொருளாக மாறி இருக்கிறோம். இதனால், நாங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் பெரும் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறோம். வழுக்கை தலைக்கு தீர்வில்லை.
ஆகையால், எங்களையும் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும், தீராத நோய் உள்ளவர்களுக்கும் அரசு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல், வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் இந்த ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நகைச்சுவையாக பார்க்காமல் தீவிரமாக அணுக வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தெலங்கானா முழுவதும் போராட்டம் வெடிக்கும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.