சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் 10 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் பகுதியில், கடந்த அக்டோபர் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கார் ஒன்றில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் காரில் இறந்து கிடந்த நபர், ஜமேஷா முபின் என தெரியவந்தது. இதுதொடர்பாக ஜமோஷா முபின் நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கை தமிழக முதல்வர் என்ஐஏவுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி என்ஐஏ அதிகாரிகள் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.
அதில், கோவை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியது வெளியானது. பின்னர், என்ஐஏ அதிகாரிகள் சென்னை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் 33 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதைதொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தாபீக், பரோஸ் கான், உமர் பரூக் என மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜமேசா முபின், சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கி இருந்த காடுகளில் 6 முறை ரகசிய கூட்டங்கள் மற்றும் தீவிரவாதத்துக்கு ஆட்கள் சேர்த்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் வழங்கி உள்ளார். இந்த ரகசிய கூட்டத்தில் ஜமேஷா முபின் 3 முறை கலந்து கொண்டு ஆயுதப்பயிற்சி வழங்கியதும், மேலும், குண்டு வெடிப்புக்கு ஏற்ற இடங்கள் தேர்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக, என்ஐஏவிடம் சிக்கிய 3 பேர் தகவல் தெரிவித்தனர்.
காட்டில் நடத்தப்பட்ட ரகசிய கூட்டத்தில் ஜமேஷா முபினுடன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமது தாஹா, கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவ்பீக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டதும், இவர்கள் மூலம் பல இளைஞர்களை காட்டிற்கு அழைத்து வந்த ஆயுதப்பயிற்சி மற்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் உக்கடம் கார் வெடிப்பு சம்பவத்தில் நெருங்கிய தொடர்பில இருந்த முகமது தாஹா, கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவ்பீக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதற்காக என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் 6 பேரிடம் வரும் 17ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் முகமது தாஹா, ஷேக் இதயத்துல்லா, முகமது ரியாஸ் நவாஸ், முகமது தவ்பீக், சனோபர் அலி, பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை 10 நாள் காவலில் எடுத்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், சத்தியமங்கலம் காடுகளில் நடத்தப்பட்ட ரகசிய கூட்டம் மற்றும் ஆயுதப்பயிற்சிக்கு யார் யார் வந்தது.
அவர்கள் பின்னணி என்ன. ரகசிய கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகள் யாரேனும் கலந்து கொண்டார்களா. ரகசிய கூட்டத்தில் ஜமேஷா முபின் என்ன ஆலோசனை நடத்தினர் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன் வைத்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று இரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் காட்டில் ரகசிய கூட்டம் மற்றும் ஆயுதப்பயிற்சியில் கலந்து கொண்ட நபர்கள் பலர் சிக்குவார்கள் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.