திருப்பூரில் கால்நடைகளுக்கு பரவிவரும் ‘கேப்ரிபாக்ஸ்’ வைரஸ்: தொழுவங்களை சுத்தமாக பராமரிக்க அறிவுரை

திருப்பூர்: பல்லடம் கணபதிபாளையத்தில் மாடுகளுக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

முகாமுக்கு கால்நடை மருத்துவர் அறிவுச் செல்வன் தலைமை வகித்து கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி செலுத்தினார்.

முகாமில் பங்கேற்ற கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் குமாரரத்தினம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகள் உள்ளன. கால்நடைகளுக்கு ‘கேப்ரிபாக்ஸ்’ என்ற வைரஸ் தாக்குதலால் பசு மற்றும் எருமைகளுக்கு தோல் கட்டிநோய் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2,000-க்கும்மேற்பட்ட மாடுகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நோய் மழைக்காலங்களில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் மூலம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, கண் மற்றும் மூக்கில் இருந்து சளி போன்ற நீர் தென்படுதல், காய்ச்சல்,கறவை மாடுகளில் திடீரென பால் குறைதல், உடம்பு முழுவதும் கட்டிகள் தென்படுதல், கால் வீக்கம்,கழிச்சல் போன்றவை ஏற்படும்.

இதையடுத்து, கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் பணிமாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. ஈக்கள் மற்றும் கொசுக்களால் இந்நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, கால்நடைகள் வளர்க்கப்படும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளை இடம்விட்டு இடம் மாற்றக்கூடாது.

தடுப்பூசி மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம். மாடுகளின் மேல் ஈ மற்றும் கொசு இல்லாமல் பாதுகாத்தல், மாட்டுத் தொழுவங்களில் கோமியம், சாணம், மழை நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் ‘கேப்ரிபாக்ஸ்’ என்ற வைரஸ் பரவாமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.