பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

ஒரு நாள் கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே கராச்சியில் நடந்த இரு டெஸ்ட் போட்டியும் ‘டிரா’வில் முடிந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. டெஸ்டில் சொதப்பிய பாகிஸ்தான்அணி ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் பாபர் அசாம், பஹார் ஜமான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், பந்து வீச்சில் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், முகமது நவாஸ் வலு சேர்க்கிறார்கள்.

பாபர் அசாம் பேட்டி

இதையொட்டி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ‘உள்ளூரில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் செயல்பாடு மோசமாக இருப்பதால் டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவது குறித்து சிந்திக்கிறீர்களா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பாபர் அசாம், ‘டெஸ்ட் தொடர் முடிந்து விட்டது. இப்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடப்போகிறோம். எனவே அது தொடர்பான கேள்வியை கேளுங்கள். சமீப காலமாக நாங்கள் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி உள்ளோம். அதே உத்வேகத்தை நியூசிலாந்துக்கு எதிராகவும் தொடர விரும்புகிறோம். நியூசிலாந்து சிறந்த அணி என்பதை அறிவோம். இந்த தொடர் இரு அணிக்குமே கடினமாக இருக்கும்’ என்றார்.

நியூசிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் கேப்டன் கேன் வில்லியம்சன், டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், பின்ஆலென் உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் டிம் சவுதி, சான்ட்னெர், லோக்கி பெர்குசன், பிரேஸ்வெல் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மாலை 3 மணிக்கு…

இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 48-ல் நியூசிலாந்தும், 55-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டங்களில் முடிவு இல்லை. ஏறக்குறைய சரிசம பலத்துடன் இவ்விரு அணிகளும் மல்லுகட்டுவதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.