லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடியின் டிவிட்டர் சமூக வலைதளத்தை நிர்வகிப்பவர் மணிஷ் ஜெகன். இவர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மார்பிங் படங்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மிரட்டுவதாகவும் பாஜ இளைஞரணியின் சமூக வலைதளபிரிவு பொறுப்பாளர் ரிச்சா ராஜ்புத் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிஷ் ஜெகனை நேற்று கைது செய்தனர்.
இத்தகவல் அறிந்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் லக்னோ போலீஸ் டிஜிபி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காத்திருந்த அகிலேஷுக்கு போலீசார் கேன்டீன் டீ தந்தனர். அதை குடிக்க மறுத்த அகிலேஷ், ‘‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் என்ன விஷம் கலக்கப்பட்டுள்ளதா?’’ என்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் வெளியில் இருந்து டீ வாங்கி வரச் சொல்லி அதை அகிலேஷ் குடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. போலீஸ் அதிகாரிகள் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமாஜ்வாடி நிர்வாகியின் கைது நடவடிக்கை கண்டனத்திற்குரியது, வெட்கக் கேடானது என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது.