நாமக்கல்: ‘சாலையோரங்களில் நடைபெறும் செல்போன், சிம்கார்டு விற்பனையை தடை செய்ய வேண்டும்’ என விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று நாமக்கல்லில் அளித்த பேட்டி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அங்கீகாரம் இல்லாத பலர் சாலையோரங்களில் செல்போன் மற்றும் சிம்கார்டு விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகைய இடங்களில், சமூக விரோதிகள் முறையான அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகளை வாங்கி தவறாக பயன்படுத்துகிறார்கள்.
எனவே, அங்கீகாரம் இல்லாமல் நடைபெறும் செல்போன், சிம் கார்டுகள் விற்பனையை, போலீசார் தடை செய்ய வேண்டும். வணிக வரித்துறையின் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக்கோரி, வரும் 10, 24ம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அந்நிய நிறுவனங்கள், சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதை தடை செய்யக்கோரி, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும்.
உள்ளூர் வியாபாரிகளைக காப்பாற்றும் வகையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளை ஒருங்கிணைத்து, பொருட்களை மொத்த கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான முதற்படியாக, நாமக்கல்லில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடைகளை ஒருங்கிணைத்து, மொத்த வியாபாரக் கடை துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விக்கிரமராஜா தொவித்தார்.