மாஸ்கோ: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க்கப்பல் கர்ஷ்கோவ் அட்லாண்டிக் கடலில்ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்போது, “ரஷ்யாவுக்கு எதிரி நாடுகளால் ஆபத்து உள்ளது. எனவே நாட்டை பாதுகாக்கும் பணியில் கர்ஷ்கோவ் போர்க்கப்பல் ஈடுபடும். இந்த போர்க்கப்பலில் உள்ள அதிநவீன ஏவுகணைகள் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.இந்த சூழலில் ரஷ்யாவின் அதிநவீன கர்ஷ்கோவ் போர்க்கப்பல் அட்லாண்டிக் கடலில் ரோந்து பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 14 மாகாணங்கள் அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளன. அந்த பகுதியில் ரஷ்ய போர்க்கப்பல் ரோந்து சுற்றுவது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் பகிரங்க எச்சரிக்கை ஆகும்.
சர்கோன் உட்பட அதிநவீன ஏவுகணைகள் கர்ஷ்கோவ் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இவை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. சர்கோன் ஏவுகணை மூலம் 1,000 கி.மீ. தொலைவு வரை தாக்குதல் நடத்த முடியும். இது ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது.
இந்த ஏவுகணையை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம். எந்தவொரு ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் சர்கோன் ஏவுகணைகளை அழிக்க முடியாது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த ஏவுகணைக்கு இணையான ஏவுகணை இல்லை. உக்ரைனை கைப்பாவையாக பயன்படுத்தி ரஷ்யா மீது நேட்டோ படைகள் மறைமுகமாக தாக்குதல் நடத்தினால் கர்ஷ்கோவ் போர்க்கப்பல் தகுந்த பதிலடி கொடுக்கும்.
இவ்வாறு ரஷ்ய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.