ஸ்ரீநகர்: தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடியை பாஜ மாற்றிவிடும் என கருத்து தெரிவித்த மெகபூபா முப்திக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ‘‘காஷ்மீரில் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜ தயாராகி வருகிறது. இப்படியே போனால் அவர்கள் தேசியக் கொடிக்கு பதிலாக காவிக் கொடியை பறக்கவிடுவார்கள்’’ என்றார்.
இதற்கு பதிலடி தந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜ செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், ‘‘பாஜவின் தாரக மந்திரமே முதலில் தேசம், 2வது கட்சி, கடைசிதான் சொந்த நலன். தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த பாஜ தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களின் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். எனவே தேசிய கொடியை மாற்ற விரும்புவதாக கூறுவது அர்த்தமற்றது. மெகபூபா பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். யதார்த்தத்தில் இருந்து அவர் வெகு தொலைவில் உள்ளார். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் தேசியக் கொடி பறக்காது என கூறியவர் அவர். எனவே தேசிய கொடிக்கு உண்மையான எதிரி யார் என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார்.