விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகம்

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கியுள்ள எரிபொருள் கையிருப்பை , நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கமத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டில் விவசாய மற்றும் மீன்பிடித் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருள் சீன அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த எரிபொருள் கையிருப்பை நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர், ஏ.எம்.எச்.எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இவற்றை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் விசேட வவுச்சர் ஒன்றினூடாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.. அத்துடன், அந்த வவுச்சர்களை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளவில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, அறுவடை நடவடிக்கைகளுக்காக ஒரு ஹெக்டயருக்கு 15 லீற்றரும், இரண்டு ஹெக்டருக்கு 30 லீற்றர் என்ற அடிப்படையில், விவசாயிகளுக்கு இந்த எரிபொருள் கையிருப்பு விநியோகிக்கப்பட உள்ளதாக கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.