தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மரபுப்படி தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையைவ வாசிக்க தொடங்கினார். அப்போது, திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என அவர் அண்மையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு…தமிழ்நாடு’ என ஒருமித்த குரலில் முழக்கங்களை எழுப்பினர்.
இருப்பினும் ஆளுநர் ரவி தன்னுடைய உரையை தொடர்ந்து வாசித்தார். அவர் உரையை வாசிக்கும்போது, அந்த உரையில் இருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தார். அதுமட்டுமல்லாமல், சில வரிகளை தானாகவே சேர்த்துக் கொண்டார். இதற்கு அவையில் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றிலும் முரணான வகையில் ஆளுநர் நடந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
பேரவை தொடங்கும்போது அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, கண்ணியத்தோடு எந்த எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறிய அவர், அரசின் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொண்ட ஆளுநர் உரை சட்டமன்ற மரபுகளை மீறிய செயல் என கண்டித்தார். ஆளுநரால் சேர்க்கப்பட்ட எந்த பகுதிகளிலும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனைக் கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கோபத்துடன் தேசிய கீதம் இசைப்பதற்குள் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.