திருப்பதி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஊழலை ஒழிக்க இளைஞர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் முரளி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான இளைஞர் பயிற்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், அவர் பேசியதாவது: உலக புரட்சி இயக்கத்தில் சே குவேரா, காஸ்ட்ரோ, மாவோ, சவு என் லீ என அனைவரும் இளமை காலத்தில் அந்தந்த நாடுகளில் புரட்சிகளை முன்னெடுத்தனர். கடந்த 1848ம் ஆண்டில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையால் ஈர்க்கபட்டு பல நாடுகளில் புரட்சிகர இயக்கங்கள் நடத்தப்பட்டன. பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இளைஞர்கள் புரட்சியால் கவரபட்டது. உலகை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில் உழைக்கும் வர்க்க இயக்கங்களை தொடங்கினர்.
அக்கால இளைஞர்களில் பெரும்பாலோர் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் ஈர்க்கபட்டு அந்தந்த நாடுகளில் தேசிய விடுதலை போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை ஒழுங்கமைத்தனர். இந்தியாவில் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை படிக்க தொடங்கினர். ரஷ்ய புரட்சியால் பல இளைஞர்கள் தேசிய இயக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி ஈர்க்கபட்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கினர்.
இந்தியாவில் பகத்சிங், ராஜூ குரு, சுக்தேவ் ஆகியோர் ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு ராணுவம்’ என்ற பெயரில் சொந்த ராணுவத்தை உருவாக்கி புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்கினர். கதர் கட்சி என்ற பெயரில் லாலா ஹரிதயாள் மற்றும் பலர் அமெரிக்காவில் இருந்து இளைஞர்களை திரட்டி ஆயுதம் ஏந்தி கமாகது மாரு என்ற கப்பலில் பர்மாவுக்கு வந்து இந்தியாவை விடுவிக்கும் முயற்சியில் பல சிரமங்களை சந்தித்தனர்.
சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்ற வரலாற்று சதி வழக்குகளை எதிர்கொண்டனர். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள். தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஊழலை ஒழிக்க இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.