உலகளவில் கோவிட் தொற்று மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது என்றே கூற வேண்டும். பல அரசுகள் பதைபதைத்திருக்கும் வேளையில், சீனாவின் இளைஞர்கள் பலரும் தவறான கருத்துகளைச் சுமந்து கொண்டு வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீனாவில் கோவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. அந்நாடு பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டு வரும் அதேநேரத்தில், மருத்துவச்சேவைகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், அங்குள்ள இளைஞர்கள் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
எந்தவொரு கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல், கோவிட் தொற்றை வரவழைத்துக் கொண்டால், 14 நாள்கள் வரை வீட்டில் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்த்தொற்றின் பாதிப்புக்குப் பிறகு அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என நம்புகிறார்கள்.
இத்தகைய கருத்தால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வேண்டுமென்றே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்கெனவே சீன தடுப்பூசிகள் சரியாக வேலை செய்வதில்லை என அந்நாட்டு மக்கள் அவற்றைப் பெரிதளவில் எடுத்துக் கொள்வதில்லை. அதோடு வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அதிக விலைக்குக் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை ஏழைகளால் வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை.
இந்நிலையில், இளைஞர்கள் தவறான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருவது, நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியுள்ளது.