திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு இருக்கும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தை, தனிநபர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டியிருக்கிறார். இதில், ஒரு அறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகம் செயல்பட்டுவருகிறது. அதனருகில் 3 கடைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வணிக வளாகக் கட்டடம் தொடர்பாக வி.சி.க நிர்வாகிகளுக்கும், அங்கு கடை நடத்திவரும் சின்னக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், ஆத்திரமடைந்த வி.சி.க நிர்வாகிகள் கடந்த வாரம் தங்களது அலுவலகத்தின் உள்பக்கமாக இருந்து சின்னக்கண்ணுவின் கடை சுவற்றை துளைப்போட்டு அகற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஆரணி நகர காவல் நிலையத்தில் வி.சி.க கிழக்கு மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்ற பகலவன், ஒன்றியச் செயலாளர் ரமேஷ் உட்பட 6 பேர்மீது சின்னக்கண்ணு புகாரளித்தார்.
இருத்தரப்பினரையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காவல்துறையினரிடமும் வி.சி.க நிர்வாகிகள் பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளியும் வெளியாகி பரபரப்பைக் கூட்டிய நிலையில், நேற்றைய தினம் வி.சி.க மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர் ரமேஷ் இருவரையும் 2 பிரிவுகளின்கீழ் போலீஸார் கைதுசெய்தனர். இருவரையும் விடுவிக்கக்கோரி வி.சி.க-வினர் ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைதுசெய்யப்பட்ட வி.சி.க நிர்வாகிகள் இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதேபோல, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வி.சி.க-வினர் 22 பேர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதால், ஆரணியில் பதற்றம் நிலவுகிறது.