உத்தரப்பிரதேசம்: உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை வருகிற 13ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
வாரணாசியின் ரவிதாஸ் படித்துரையில் இருந்து கிளம்பும் சொகுசுக்கப்பல் காசிப்பூர், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் வங்கதேசம் வழியாக அசாமின் திப்ருகரை மார்ச் 1ம் தேதி அடைகிறது. இந்தியாவின் மிக பெரிய இரண்டு நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திராவில் இந்த கப்பல் பயணம் செய்வது சிறப்பாகும். அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து மூன்று மாடிகள் கொண்டு இயங்கும் சொகுசு கப்பலில் 18 அறைகள், நவீன படுக்கை வசதி, ஸ்பா, உடற்பயிற்சி கூடம் என ஆடம்பர வசதிகள் உள்ளன. மேலும் கப்பலில் கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.