நாகை: நாகை ஆரியநாட்டு தெரு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஜம்புகேஸ்வரன்(35). இவரது மனைவி மகேஸ்வரி(30). இவர்களது மகன் ரோகித்(12), மகள் அப்ஷனா(11). இதில் அப்ஷனா இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி நடந்த ஒரு கொலை வழக்கில் ஜம்புகேஸ்வரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மகன் ரோகித், இதே பகுதியில் உள்ள மகேஸ்வரின் தங்கை அமுதா வீட்டில் வளர்ந்து வருகிறார்.
கணவர் சிறையில் உள்ளதால் மகேஸ்வரி நாகை நகராட்சியில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்து கணக்கெடுத்து மருந்து, மாத்திரை வழங்கும் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கணவர் சிறையில் இருப்பதாலும், வேலை இல்லாததாலும் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மகளுடன் மகேஸ்வரி சிரமப்பட்டு வந்தனர். மேலும் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் அவர் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு அமுதா, அக்கா மகேஸ்வரி வீட்டில் இருந்த தனது செல்போனை எடுப்பதற்காக வந்தார். பின்னர் வீட்டின் கதவு அருகே நின்று அக்காவை அமுதா அழைத்தார். நீண்ட நேரமாக எந்த பதிலும் வராததால் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் மகேஸ்வரியும், அப்ஷனாவும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா நாகை வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மகேஸ்வரி, அப்ஷனா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கணவர் சிறையில் உள்ளதால் குடும்பம் நடத்த வழியில்லாததால் மகள் அப்ஷனாவை சேலையில் தூக்கிட்டு கொலை செய்து விட்டு அவரும் அந்த சேலையில் மகேஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.