ஸ்ரீ வில்லிப்புத்தூர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக சுமார் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்ததாக இரு வேறு வழக்குகளில் கடந்த ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை குற்றப்பிரிவு ஆய்வாளர் ராதிகா தாக்கல் செய்தார். சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினருக்கு வேலை வாங்கி தருவதற்காக 30 லட்சம் ரூபாயும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் உறவினர் விஜயன் நல்லதம்பி என்பவர் 3 கோடி ரூபாயும் ராஜேந்திர பாலாஜிக்கு கொடுத்து ஏமாந்ததாக புகார் அளித்தனர். இவ்விரு புகார்களின் அடிப்படையில் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.