எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு 2023 ஆம் ஆண்டின், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எவ்வாறாக செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டி இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றாக ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்படாமல் தொடர்ச்சியாக
ஓ.பன்னீர்செல்வம்
எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்ந்து வருகிறார். இது குறித்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியையும், அங்கீகாரத்தையும் பறிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு வியூகம் வகுத்துள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோனால் அது ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இது தவிர அண்மையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் ஆட்கடத்தல் நடைபெற்றதாகவும், இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது, பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரம், அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எழுப்ப அதிமுக திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.