அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்த குறிப்பிட்ட சொற்கள் ஏன் தவிர்க்கப்பட்டன என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநர் உரையை ஜனவரி 6ஆம் தேதி அரசு அனுப்பி வைத்ததாகவும், அதிலிருந்த ஆட்சேபகரமான விஷயங்களை நீக்கும்படி ஆளுநர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அச்சுக்கு போய்விட்டதால் பேசும்போது குறிப்பிட்ட விஷயங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என அரசுத் தரப்பில் பதில் அளித்ததாக தெரிகிறது. அதன்படியே அரசைப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்த பகுதிகளை ஆளுநர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ‘இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்’ போன்ற வரிகள் தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது.
இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன் என முன்பே ஆளுநர் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. யதார்த்த நிலை வேறாக இருக்கும் போது தமிழகம் அமைதியின் சொர்க்கமாக தொடர்கிறது என இல்லாத ஒன்றை பதிய வைப்பதை ஆளுநர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமேவிடுவிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்பதால் மத்திய அரசின் முயற்சி என்ற வார்த்தையையும் ஆளுநர் சேர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மகாராஷ்டிரா 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்களை அந்நிய முதலீடாக ஈர்த்துள்ளதாகவும், ஆனால் இதே காலகட்டத்தில் 2 புள்ளி 5 பில்லியன் டாலர்களை ஈர்த்துவிட்டு தமிழக அரசு பெருமையடைவது பிழை என்பதால் அதுபற்றிய சொற்களை ஆளுநர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. உரையை வாசிக்க விடாமல் ஆளுநரைச் சுற்றி நின்று சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதை சபாநாயகர் வேடிக்கை பார்த்ததாகவும், ஆளுநர் உரைக்குப்பிறகு அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது மரபை மீறிய செயல் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது சட்ட வல்லுநர்கள் முன்பிருக்கும் தீவிர விவாதப்பொருளாகும் என தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM