நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு ராட்சத லாரியில் தேர் பீடம்: திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், நித்தியானந்தாவின் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. மேலும், கர்நாடக மாநிலம் பிடதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவரது ஆசிரமம் இருந்த நிலையிலும், தற்போது இந்த ஆசிரமங்களில் தங்காமல் கைலாசா எனும் இடத்தில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தங்கி இருக்கும் கைலாசா எனும் இடம் எங்கே இருக்கிறது, அங்கே யார்? யார் தங்கி இருக்கின்றார்கள் என்கிற விவரங்கள் எல்லாம் தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது. சமீபத்தில் இவரது உடல் நலிவுற்றிருந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் இவரது சீடர்கள் சிலர் மட்டும் தங்கி உள்ளனர்.

வெளியாட்கள் இந்த ஆசிரமத்துக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில், நேற்று ராட்சத லாரி மூலம் தேர் பீடம் கொண்டுவரப்பட்டு நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு உள்ளே வைக்கப்பட்டது. அதனை பெரிய கிரேன் மூலம் இறக்கி வைத்துள்ளனர். சக்கரங்களுடன் கூடிய தேரின் பீடம் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எதற்காக கொண்டு வந்துள்ளனர், அதன் நோக்கம் என்ன என்கிற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு திடீரென மரத்தேர் பீடம் கொண்டுவரப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.