நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரிக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் முப்படை உயர் அதிகாரிகள் வருகை தந்து பயிற்சி அளித்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி உதகை வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், மோசமான வானிலையால் நஞ்சப்பாசத்திரம் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர்.
இந்த துயர நிகழ்வு குறித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விவகாரத்தைப் பற்றி கருத்து தெரிவித்து பதிவிட்டிருந்ததாக தி.மு.க-வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
திருமங்கை மன்னன் வேடுபறி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மாரிஸ்தாஸ் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது என்றும், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, ஜனவரி 2ம் தேதி மாரிதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 9) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு உரிய அவகாசம் தேவை என்றும் கருத்து தெரிவித்தது. மேலும், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் அதனால், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.