மதுரை: அண்டை மாநில கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் கொட்டப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சியைச் சேர்ந்த சிதம்பரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சமீபகாலமாக அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகள் வழியாக மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன. இதனால், டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, எல்லைப்பகுதிகளில் நிரந்தர சோதனைச்சாவடி அமைக்கவும், லாரி உரிமையாளர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் வழக்கு தொடர்ந்தேன். இதில், உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தமிழ்நாட்டிற்குள் அண்டை மாநில கழிவுகள் கொட்டுவதை தடுக்க 8 எல்லைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.