வரதட்சணை வழக்கில் ரூ.11 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் : ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு| வரதட்சணை வழக்கில் ரூ.11 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்

புதுடில்லி,வரதட்சணை வழக்கில் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமார், 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான வருண்குமார், கடந்த 2010-ம் ஆண்டு சென்னை யில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்தார்.

ஐ.பி.எஸ்., பணி கிடைத்ததும், திருமணம் செய்து கொள்ள வரதட்சணை கேட்டு மிரட்டியதாக பிரியதர்ஷினி போலீசில் புகார் அளித்தார்.

எனினும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வருண்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வருண்குமார், நீதிமன்றத்தில் சரண் அடைந்ததுடன், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, 2018ல் வருண்குமார் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் வருண்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பிலும் ஒப்புக்கொண்டதையடுத்து, சமரச விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஏற்று உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில், ‘மனுதாரர் பிரியதர்ஷினி இழப்பீட்டுத் தொகையை தனக்கென பெற்றுக்கொள்ளாமல், அதை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நல நிதிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுஉள்ளார்.

‘எனவே, அதை 10 நாட்களுக்குள் வருண்குமார் வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் வருண்குமாருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கின் சாட்சிகளை எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு தரப்பும் எவ்வித பரஸ்பரம் இடையூறுகளை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்றம் வரதட்சணை வழக்கை முடித்து வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.