தேர்தலில் எல்லா கட்சிகளுமே வெற்றி பெற முயற்சி செய்யும்; குமாரசாமி பேட்டி

கலபுரகி:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எதையும் செய்யவில்லை

சட்டசபை தேர்தலில் கோலாரில் போட்டியிடுவதாக சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவுக்கு இது கடைசி தேர்தல். அதன் பிறகு அவர் கோலாரை கை விட்டு சென்று விடுவார். அவர் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீர்ப்பாசனத்துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வழங்குவதாக கூறுகிறார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது என்ன செய்தார்?.

கோலார் தொகுதியில் மக்களின் ஆசியுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார். கடைசி நேரத்திலாவது தனது தொகுதியை சித்தராமையா அறிவித்துள்ளார். இதனால் அவரை பற்றி குறைத்து பேசுவது நிற்கும். அவர் மூத்த அரசியல் தலைவர். தேர்தலில் அவரவர் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அரசியல் கட்சிகள் முயற்சி செய்யும். ஆனால் முடிவு மக்கள் கையில் தான் உள்ளது.

குற்றச்சாட்டுகள் கூறவில்லை

மந்திரி அரக ஞானேந்திரா குறித்து நான் தவறான குற்றச்சாட்டுகளை கூறவில்லை. நானும் அரசியல்வாதி தான். என்னுடன் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். எல்லா தலைவர்களுடனும் மக்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். ஆனால் சான்ட்ரோ ரவி நேரடியாக ஆட்சியின் செயல்பாடுகளில் தலையிட்டுள்ளார்.

தனக்கு போலீஸ் டி.ஜி.பி., பெங்களூரு கமிஷனருடன் தொடர்பு உள்ளதாக அவரே கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் போலீஸ் விசாரணைக்கு அரக ஞானேந்திரா உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை எப்படி நடைபெறும்?. பயங்கரவாத செயலை விட இந்த சான்ட்ரோ ரவி விவகாரம் மோசமானது. பயங்கரவாதம், அப்பாவி மக்களை கொல்கிறது. ஆனால் இந்த சான்ட்ரோ ரவி போன்றோரின் சமூக விரோத செயல்கள் இந்த சமூகத்தையே அழிக்கிறது. அதனால் சான்ட்ரோ ரவி விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.