ஶ்ரீவில்லிபுத்தூர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணாளன் முன்னிலையில் இன்று இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 மீது 15 பக்கங்கள், 2-வது வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய நல்லதம்பி உட்பட 8 பேர் மீது 25 பக்கங்கள் என இரு வழக்குகளிலும் சேர்த்து 43 பக்க குற்றப் பத்திரிகையை ஆய்வாளர் பாரதி குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.