தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருந்து வருகிறார். இவரது மகள் ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி இருந்தார்.
அந்த வகையில் தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.
கடந்த சில நாட்களாக ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவர் பேசிய சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவல் பரப்புவதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஷர்மிகா தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் சித்த மருத்துவாரான ஷர்மிகா இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 15 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.