இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கு அவர் அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து ஓரங்கட்டப்படலாம்.
இது குறித்து ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட முடியாது. தொடர்ச்சியாக போட்டிகள் வருவதால் பணிச்சுமையை குறைக்க அவர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கப்பட வேண்டும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் வருகிறது. அதன் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்க உள்ளது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். நிச்சயமாக சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து ஒதுங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றார்.
’50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மீதே ஒவ்வொருவரின் கவனமும் உள்ளது. ஆனால் எதிர்கால கேப்டன்ஷிப் குறித்து இப்போது சொல்வது கடினம். அதற்கு எதிர்காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருங்கள்’ என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.