பெங்களூரு:
பைக் டாக்சிக்கு தடை
பெங்களூருவில் பைக் டாக்சி சேவைக்கு போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் பைக் டாக்சி சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க கோரி பெங்களூரு சாந்திநகர் டபுள் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நேற்று மதியம் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்றுகூடி திடீரென போராட்டம் நடத்தினர். அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரியும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் தடியடி
மேலும் அந்த வழியாக சென்ற பஸ்களை வழிமறிக்கவும் செய்தனர். சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வில்சன்கார்டன் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள், போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆட்டோ டிரைவரான சுனில் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆட்டோ டிரைவர்கள் சுனிலை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோ டிரைவர்கள் போராட்டதால் வட்டார போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு பரபரப்பு உண்டானது.