சென்னை: பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம் அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் ஆளுநர் உரையில் “ஜூலை 2021 முதல் இன்று வரை 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதனால், 2,23,210 கோடி ரூபாய் முதலீடும் 3,44,150 நபர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உறுதிசெய்யப்படும். இக்காலகட்டத்தில், 28,232 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி, தோல்பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி பாதுகாப்புத் தொழில் கொள்கை போன்ற பல துறைசார் கொள்கைகள் 2022 ஆம் ஆண்டில் இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், எரிபொருட்களில் எத்தனால் சேர்த்தல், பசுமை ஹைட்ரஜன், மின் வாகனங்களுக்கான கொள்கைகள் ஆகியவை மிக விரைவில் வெளியிடப்படும்.
சென்னை தவிர பிற நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திட உகந்த சூழலை உருவாக்க, ஏழு இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தின் மூன்றாவது டைடல் பூங்கா மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இது நமது மாநிலத்தின் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்வதோடு, அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும்.
கரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்பிற்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பெருமளவில் மீண்டு வந்துள்ளன. இந்நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் 20 சதவீதமும், கடன் கணக்குகளின் எண்ணிக்கை 19 சதவீதமும் உயர்ந்துள்ளன. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 2,344 கோடி ரூபாய் மதிப்புள்ள, 16,000 க்கும் மேற்பட்ட சுயதொழில் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, நடப்பு ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கென ஐந்து புதிய தொழிற்பேட்டைகளையும் அரசு தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (StartupTN) வாயிலாக மாநிலத்தில் உள்ள புத்தொழில்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மே 2021 முதல் மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், நம் நாட்டிலேயே முதன்முறையாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் புத்தொழில்களுக்கு உதவ, 30 கோடி ரூபாய் சிறப்பு நிதி அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவரையும் உள்ளடக்கிய புத்தொழில் சூழல் மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சி பெற்று திறமையிலும், தகுதியிலும், சிறந்து விளங்கிட ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. கற்கும் கல்விக்கும், தொழில்துறைகளின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிறைவு செய்து, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரக்கூடிய திறன் பயிற்சிகளும் தொழில்சார்ந்த பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இத்தகைய சீரிய முன்னெடுப்புகளின் மூலம், 3 இலட்சம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், 4.5 இலட்சம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இதன் மூலம் பயனடைவர். கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயிலேயே மாணவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை உறுதி செய்வதோடு, தொழில் நிறுவனங்களில் பணியாற்ற, திறன்மிகு மாணவர்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.