திருவில்லிபுத்தூர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, திருவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இவர், ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, அவரது ஜாமீன் மனு, கடந்த 2021 டிசம்பரில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து சுமார் 20 நாட்களாக அவரை தேடி வந்தனர். கடந்த 2022, ஜன.5ல் கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அவரை போலீசார் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். அவருக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதால், திருச்சி மத்திய சிறையில் இருந்து கடந்த ஆண்டு ஜன.13ம் தேதி ராஜேந்திர பாலாஜி வெளியே வந்தார். இந்நிலையில், திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணாளன் முன்னிலையில், இதுதொடர்பான 2 வழக்குகளில் 43 பக்க குற்றப்பத்திரிகையை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ராதிகா குமார் நேற்று தாக்கல் செய்தார். முதல் வழக்கில் ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் மீதும், 2வது வழக்கில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கு சூடு பிடித்துள்ளது.