அரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2.19 கோடி குடும்பங்கள்: தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம்அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 2.19 கோடி குடும்பங்களுக்கு ரூ.2,429.05 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ரூ.487.92 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளியவர்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக, சென்னை கடற்கரை சாலை சத்யா நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், இலவச வேட்டி, சேலைகளையும் முதல்வர் வழங்கினார்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு ஒரே நேரத்தில் அதிக மக்கள் வருவதை தவிர்க்கும் வகையில், நாள், நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசை மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், சக்கரபாணி, காந்தி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூட்டுறவு, உணவு துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், துணி நூல், கதர்துறை செயலர் தர்மேந்திர பிரதாப்யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததை அடுத்து, தமிழகத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நேற்றே தொடங்கியது. நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வரிசைப்படி 12-ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 13-ம் தேதியும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

ரேஷன் கடை திறப்பு: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், தொகுதியில் 40,294 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் விதமாக, அதே தெருவில் 2 நியாயவிலை கடைகளில் உள்ள 1,941 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் என்று அரசின் மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.