50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை விட மோசமான சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், குஷால்நகர் தாலுகா கூடு மங்களூரு பகுதியை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி. இவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த போது அவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.